நுண் வணிகர் (Micro Merchants) பரிவர்த்தனைகளுக்காக DFCC வங்கியானது Visa உடன் கூட்டுச் சேர்ந்துள்ளது
March 30, 2021
எதிர்வரும் ஆண்டுகளில் வாடிக்கையாளர் மையப்படுத்தப்பட்டதாகவும், டிஜிட்டல் முறையில் தொழிற்படும் வங்கியாகவும் மாற வேண்டும் என்ற நோக்குடன் பயணித்து வருகின்ற DFCC வங்கி, இலங்கையில் நுண் வணிக மையங்கள் மத்தியில் அட்டையை ஏற்றுக்கொள்வதை அதிகரித்து, Micro Merchant Businesses மூலமாக டிஜிட்டல் முறையில் தொழிற்படும், செலவு குறைந்த பரிவர்த்தனைகளை எளிதாக்கும் நோக்குடன் அண்மையில் Visa வுடன் கூட்டுச்சேர்ந்துள்ளது. இந்த கூட்டாண்மை DFCC வங்கியின் வணிகர்களுக்கான பரிவர்த்தனை செயலாக்கத் திறனை, குறைந்த பரிவர்த்தனைச் செலவுகளுடன் மேலும் வலுப்படுத்துகின்ற அதேசமயம், பணத்திற்குப் பதிலாக அட்டை மூலமான கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கான அவர்களின் திறனை மேம்படுத்தவும் இடமளிக்கின்றது.
Visa வின் முயற்சியாக அமைந்துள்ள Sri Lanka Micro Merchant Program என்ற நிகழ்ச்சித்திட்டத்தின் மூலமாக வங்கியால் வணிகர்களுக்கான பரிவர்த்தனைகளை குறைந்த செலவில் செயலாக்கம் செய்ய முடியும். இந்த பிரிவுக்கு வழங்கப்படும் உயர்வான வணிக தள்ளுபடி விகிதங்கள் அத்தகைய வணிகர்கள் அட்டை அடிப்படையிலான பரிவர்த்தனைகளை ஏற்றுக்கொள்வதில் காணப்படும் முக்கிய சவாலாக உள்ளன. இந்த முயற்சியின் மூலம், சிறு வணிகர்கள் சமூகத்தை டிஜிட்டல் மாற்றத்தின் பாதையில் கொண்டு வருவதற்கு வங்கி விரும்புகிறது.
இந்த கூட்டாண்மை குறித்து DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “பணப்புழக்கத்திற்குப் பதிலாக டிஜிட்டல் வழிமுறைகளை நாட வங்கி அறிமுகப்படுத்தியுள்ள மற்றொரு முயற்சியென்ற வகையிலும், அதற்கும் மேலாக அன்றாட வணிகப் பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு பெரும்பாலும் பணப்புழக்கத்தை உபயோகிப்பும் ஒரு சமூகத்தில் மாற்றத்திற்கு வழிநடாத்துவதாலும் இந்த திட்டத்தில் அங்கம் வகிப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ளும் தற்போதைய போக்குகள் தொடர்பில் அவர்களுக்கு அறிவூட்டுவதற்கும், புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்துவதற்கும், புதிய வாய்ப்புகளுக்கு வழிகோலுவதற்கும் அதன் மூலமாக புதிய சந்தைப் பிரிவுகளை அவர்கள் அடையப்பெற்று தமது விற்பனை அதிகரிக்க முடிவதற்கும் கணிசமான நேரத்தையும் முயற்சியையும் நாம் முதலீடு செய்ய வேண்டியிருப்பதால் இது ஒரு சிறந்த சவால் என்று நாங்கள் நம்புகிறோம். மேலும், பரிவர்த்தனை செலவுகள் குறைக்கப்பட்டுள்ளமையால் நிச்சயமாக இந்த வணிகங்கள் அதிக இலாபம் ஈட்ட உதவுவதுடன், டிஜிட்டல் கருவிகளைப் பயன்படுத்துவதன் மூலம் இந்த சந்தைப் பிரிவின் போட்டித்திறனை மேம்படுத்துவதற்காக டிஜிட்டல்ரீதியில் கட்டணங்களை ஏற்றுக்கொள்ளும் தீர்வுகளை அடையப்பெறுவதன் மூலம் நுண் வணிகர்களுக்கு தங்கள் வணிகங்களை மேம்படுத்த வங்கி அவர்களுக்கு வலுவூட்டும்,” என்று குறிப்பிட்டார்.
Visa வின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளரான அந்தோனி வாட்சன், “கொவிட்-19 தொற்றுநோயைத் தொடர்ந்து, நுண் மற்றும் சிறு வணிகங்களுக்கு ஆதரவளிக்க வேண்டிய அவசர தேவை ஏற்பட்டுள்ளதுடன், உலகளவில் இது தொடர்பில் விசா அர்ப்பணிப்புடன் உள்ளது. இந்த அர்ப்பணிப்புக்கு ஏற்ப, DFCC வங்கி இப்போது இலங்கைக்கான எங்கள் Micro Merchant Program நிகழ்ச்சித்திட்டத்தின் ஒரு அங்கமாக இருப்பதில் நாங்கள் மகிழ்ச்சியடைகிறோம். விற்பனை மையத்தில் (Point of Sale – POS) மற்றும் பொது விரைவுக் குறியீடு (QR) அடிப்படையிலான கொடுப்பனவுகள் மூலம் சிறு வணிகங்களுக்கான டிஜிட்டல் கட்டணங்களை செலவு குறைந்த மற்றும் பாதுகாப்பான வழியில் செயல்படுத்த அவர்களுக்கு உதவ நாங்கள் ஆவலுடன் உள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
DFCC வங்கியானது அருகாமைப் புல தொடர்பாடல் தொழில்நுட்பத்தால் (Near-field Communication – NFC) இயக்கப்படும் Android அடிப்படையிலான விற்பனை மைய (POS) இயந்திரங்களை வழங்குவதன் மூலம் சந்தையில் புதிய தராதரங்களை ஏற்படுத்தி வருகிறது. வாடிக்கையாளர்கள் திரையில் டிஜிட்டல் ரீதியில் கையொப்பமிடுவதன் மூலமோ, பணம் செலுத்துவதைத் தட்டுவதன் மூலமோ அல்லது chip அடிப்படையிலான அட்டையைப் பயன்படுத்துவதன் மூலமோ பாதுகாப்பான கொடுப்பனவு வழிமுறைகள் மூலமாக ஒரு பரிவர்த்தனையை நிறைவேற்றிக் கொள்ள முடியும். இந்த மொபைல் POS இயந்திரங்கள் வழியாக வாடிக்கையாளரின் வீட்டு வாசலில் பரிவர்த்தனையையும் மேற்கொள்ள முடியும் என்பதால் அவர்கள் மிகவும் சௌகரியமான வழியில் தமது வீடுகளுக்கே பொருட்களை தருவித்துக் கொள்ள முடியும். இந்த இயந்திரங்களின் மூலமாக செயலாக்கப்பட்ட பரிவர்த்தனைகள் அடுத்த நாளிலேயே வணிகருக்கு கிடைக்கப்பெறுவதால் வணிகர்களின் பணப்புழக்கமும் மேம்படுத்தப்படும். மொபைல் தொலைபேசியைப் பயன்படுத்துவதன் மூலம் வணிகர்களுக்கு LankaQR மற்றும் VisaQR கொடுப்பனவை ஏற்றுக்கொள்வதற்கு வசதியாக DFCC Pay Merchant App ஐ DFCC வங்கி வழங்குகிறது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. இலங்கையில் Business Today சஞ்சிகையால் மிகச் சிறந்த 30 நிறுவனங்களில் ஒன்றாக இந்த வங்கியும் பெயரிடப்பட்டுள்ளதுடன், மேலும் 2020 ஆம் ஆண்டில் Brand Finance இன் மிகச்சிறந்த 100 மிகவும் மதிப்புமிக்க வர்த்தகநாமங்கள் பட்டியலிலும் இடம்பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.
Visa வின் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான முகாமையாளரான அந்தோனி வாட்சன் அவர்கள் (இடது புறமிருந்து இரண்டாவது), DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்களிடம் (இடது புறமிருந்து மூன்றாவது) இது தொடர்பான ஒப்பந்தத்தை பரிமாறிக் கொள்ளும் காட்சி. Visa Worldwide PTE Ltd இன் இலங்கை மற்றும் மாலைதீவுகளுக்கான வணிகர் விற்பனைகள் மற்றும் உள்ளிணைப்புத் துறை பணிப்பாளரான நளின் திசாநாயக்க (இடது புறமிருந்து முதலாவது), DFCC வங்கியின் துணைத் தலைமை அதிகாரியும்/அட்டைத் தொழிற்பாடுகளுக்கான தலைமை அதிகாரியுமான டென்வர் லூயிஸ் (வலது புறமிருந்து இரண்டாவது) மற்றும் DFCC வங்கியின் வணிகர் உள்ளிணைப்புகளுக்கான முகாமையாளரான கிறிஷான் ஜெயமான்ன ஆகியோரும் படத்தில் காணப்படுகின்றனர்.