DFCC வங்கி LankaQR மற்றும் VisaQR மூலமாக டிஜிட்டல் வழிமுறையில் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்ள உதவுகிறது
September 28, 2021
வணிக வங்கிச்சேவையில் முன்னோடியாகத் திகழ்ந்து வருகின்ற DFCC வங்கியானது, Remarko Bakers நடமாடும் விற்பனை மையங்களில் LankaQR மற்றும் VisaQR போன்ற தளங்கள் மூலமாக டிஜிட்டல் வழிமுறையில் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதற்கு அனுசரணையளித்து, விநியோக விற்பனையாளர்களுக்கான தனது ஆதரவை மேலும் நீட்டித்துள்ளது. இது வங்கியின் டிஜிட்டல் வளர்ச்சி மாற்றத்திற்கான முயற்சியின் ஒரு அங்கமாகக் காணப்படுவதுடன், மகத்தான அளவில் வாடிக்கையாளர்களின் திருப்தியையும், அவர்களின் பாதுகாப்பினையும் உறுதி செய்வது தொடர்பில் டிஜிட்டல் வழிமுறைகளில் கொடுப்பனவுகளை ஏற்றுக்கொள்வதில் கூடுதல் கவனம் செலுத்தி, பணம் மூலமான கொடுப்பனவுகளிலிருந்து அகல்வதற்கு முயற்சிக்கும் அதனது தீர்மானத்துடனும் ஒத்திசைகின்றது.
கொவிட்-19 இலகுவாகப் பரவுகின்ற ஆபத்தை பணம் மூலமான கொடுப்பனவு முறைகள் கொண்டுள்ளமையால் இத்தகைய செயற்பாடுகளை கட்டுப்படுத்தி, பணம் மூலமாக கொடுப்பனவுகளை மேற்கொள்ள வேண்டிய தேவைகளைக் குறைத்து, மிகவும் பாதுகாப்பான வழியில் பரிவர்த்தனைகளை முன்னெடுப்பதை மேம்படுத்துகின்ற ஒரு பாதுகாப்பான, வினைதிறன் மிக்க கொடுப்பனவுப் பொறிமுறையை உறுதி செய்வதே இந்த நடவடிக்கையின் முக்கிய நோக்கமாகும். அதற்குப் பதிலாக, தொடுகையற்ற இலத்திரனியல் பரிவர்த்தனைகளின் மூலமாக உரிய பொறுப்புடன், வணிகர் மற்றும் வாடிக்கையாளர் இருவருக்கும் டிஜிட்டல் வழிமுறையிலான உறுதிப்படுத்தலுடன், அதன் மூலம் செலவுகளைக் குறைத்து, பணத்தை கையாள வேண்டிய தேவையையும், சிரமத்தையும் போக்குகின்றது. கைமுறையான பரிவர்த்தனைகளுடன் ஒப்பிடும் போது, டிஜிட்டல் வழிமுறையிலான பரிவர்த்தனைகளின் விரைவு மற்றும் செயல்திறன் ஆகியவை குறிப்பிடத்தக்க அளவில் முக்கியத்துவம் வாய்ந்தவை. தன்னியக்கமயமான, எளிதில் அணுகக்கூடிய நன்மைகளை வாடிக்கையாளர்கள் மற்றும் வணிகர்கள் என இரு தரப்பினரும் இதன் மூலமாகப் பெற்றுக்கொள்கின்றனர். உள்ளூர் வங்கியொன்றில் நடைமுறை மற்றும்/அல்லது சேமிப்புக் கணக்கொன்றைக் கொண்டுள்ள எந்தவொரு வாடிக்கையாளரும் பொது விரைவுத் தகவல் (QR) குறியீட்டை ஸ்கேன் செய்வதன் மூலம் பணம் செலுத்த தாங்கள் விரும்புகின்ற வங்கியின் செயலியை (App) பயன்படுத்தலாம் என்பதால் இது ஒட்டுமொத்த மக்களுக்கும் பயனளிக்கிறது. இந்த நடவடிக்கை வணிகங்களின் உற்பத்தித்திறன் மற்றும் இலாபத்தை மேம்படுத்துவதோடு, தேவையான அனைத்து சுகாதார மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளையும் பின்பற்றியவாறு வணிகத்தை முன்னெடுப்பதற்கான தேசிய முயற்சிகளுடன் ஒத்திசைகிறது.
Remarko Bakers நடமாடும் விற்பனை நிலையங்களில் QR அடிப்படையிலான கொடுப்பனவுகளை செயல்படுத்துவது அத்தகைய ஒரு வழிமுறையாகும். Remarko Bakers ஒரு பாரம்பரியச் சிறப்பு மிக்க சில்லறை வர்த்தக பேக்கரிச் சங்கிலித் தொடராகும். அது 1983 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்பட்டு, 40 வருட கால பாரம்பரியத்தைக் கொண்டுள்ளது. தற்போது கம்பஹா, கொழும்பு மற்றும் நுவரெலியா பிராந்தியங்களில் இயங்கி வருகிறது. நடமாடும் விநியோகப் பிரிவுகள் மூலமாக தங்கள் பேக்கரித் தயாரிப்புக்களை வீடு வீடாகச் சென்று வழங்குவதன் மூலம் வாடிக்கையாளர்கள் மத்தியில் அவற்றின் அடைவு மட்டத்தை விரிவுபடுத்துவதில் இது கூடுதலாக சேர்க்கப்பட்டுள்ளது. தங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை அதிகரிக்க கொவிட்-19 வழிகாட்டுதல்களைப் பின்பற்றி Remarko Bakers தங்கள் வாடிக்கையாளர்களுக்கு தொடுகையின்றிய கொடுப்பனவு வாய்ப்புகளை வழங்க DFCC வங்கியுடன் கைகோர்த்துள்ளது.
புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட டிஜிட்டல் கொடுப்பனவு வசதிகள் தொடர்பில் DFCC வங்கியின் தலைமை நிர்வாக அதிகாரியான லக்ஷ்மன் சில்வா அவர்கள் கருத்து வெளியிடுகையில், “இந்த கடினமான காலங்களில் பாதுகாப்பாக, திறமையாக வியாபாரத்தை முன்னெடுப்பதற்கான வழிகளை தோற்றுவிப்பது எங்கள் முக்கிய குறிக்கோள்களில் ஒன்றாகும். வாடிக்கையாளர்களின் திருப்தியை உறுதி செய்து, அவர்களுடைய பாதுகாப்பிற்கும் உத்தரவாதம் அளிப்பதை நோக்கிய டிஜிட்டல்மயமாக்கல் செயல்பாடுகளில் LankaQR மற்றும் VisaQR போன்ற டிஜிட்டல் கொடுப்பனவு பொறிமுறைகளைப் பயன்படுத்துவதற்கு இடமளிப்பது DFCC வங்கியின் சமீபத்திய முயற்சியாகும். இந்த முயற்சியானது விற்பனையாளர்கள் தங்கள் தொழிலை சுமூகமாக நடத்த அனுமதிக்கிறது. தற்போது உலகளாவில் தொற்றுநோய் பரவி வருகின்ற நிலையில், கைமுறையான பணப் பரிமாற்றங்களுடன் தொடர்புபட்ட குறிப்பிட்ட சில ஆபத்துக்களைப் போக்குகின்றது. தொடுகையின்றிய கொடுப்பனவு வழிமுறையானது பொருளாதார வளர்ச்சி மற்றும் மீள் எழுச்சிக்கு உதவும், அதே நேரத்தில் எங்கள் நாட்டு மக்களின் நிதியியல் திறன்களை மேம்படுத்தும்,” என்று குறிப்பிட்டார்.
இதில் ஆர்வமுள்ள எந்தவொரு விற்பனையாளரும் DFCC வங்கியில் தங்களுக்கு விருப்பமான கிளையொன்றில் DFCC வங்கி கணக்கொன்றைத் திறப்பதன் மூலம் இந்த வசதியைப் பெற்றுக்கொள்ளலாம். இந்த கணக்கிற்கு அவர்கள் வாடிக்கையாளர்களிடமிருந்து பெற்றுக்கொள்கின்ற கொடுப்பனவுகள் வரவு வைக்கப்படும். அனைத்து கொடுப்பனவுகள் மற்றும் சேவை தொடர்பான பரிவர்த்தனைகளுக்காக LankaQR மற்றும் VisaQR இரண்டையும் ஏற்க DFCC Pay merchant App வசதி ஏற்படுத்தித் தரப்படும்.
DFCC வங்கி கணக்குகள், பிற உள்ளூர் வங்கிக் கணக்குகள் மற்றும் DFCC கடனட்டைகளை வைத்திருக்கும் வாடிக்கையாளர்கள் QR அடிப்படையிலான பரிவர்த்தனைகளைப் பயன்படுத்த Apple App Store அல்லது Google Play Store இலிருந்து DFCC Pay App ஐ பதிவிறக்கம் செய்யலாம். DFCC Pay APP பயனர்களுக்கு உள்நாட்டில் LankaQR மற்றும் VisaQR கொடுப்பனவுகள் மற்றும் வெளிநாடுகளில் VisaQR கொடுப்பனவுகள் ஆகிய இரண்டையும் மேற்கொள்ள இடமளிக்கிறது.
DFCC வங்கி தொடர்பான விபரங்கள்
DFCC வங்கியானது 65 ஆண்டுகளுக்கும் மேலான பாரம்பரியத்துடன், வணிக மற்றும் அபிவிருத்தி வங்கி சேவைகளின் ஒட்டுமொத்த அம்சங்களையும் வழங்கும் இலங்கையின் முன்னணி, பாரிய நிதி நிறுவனங்களில் ஒன்றாகத் திகழ்ந்து வருகிறது. ஐக்கிய இராச்சியத்தின் பெருமதிப்பு மிக்க Global Brands Magazine சஞ்சிகையிடமிருந்து 2021 ஆம் ஆண்டுக்கான இலங்கையிலுள்ள Most Trusted Retail Banking Brand மற்றும் Best Customer Service Banking Brand ஆகிய விருதுகளை வங்கி வென்றுள்ளதுடன், இலங்கையில் Business Today இன் தரப்படுத்தலின் பிரகாரம் முதல் 30 ஸ்தானங்களில் திகழும் வர்த்தக நிறுவனமாகவும் இடம் பிடித்துள்ளது. ICRA Lanka Limited இடமிருந்து [SL] AA- Stable என்ற தரமதிப்பீடும், Fitch Ratings Lanka Limited இடமிருந்து A+ (lka) Stable என்ற தரமதிப்பீடும் DFCC வங்கிக்கு கிடைக்கப்பெற்றுள்ளன.