
Media Centre
Economic, social and environment development is deeply embedded in our values and informs how we conduct business, develop products and services and deliver on our goals and commitments.
DFCC வங்கி, வர்த்தக வாடிக்கையாளர்களை வலுவூட்டும் முயற்சியாக சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைமை அதிகாரியுடன் விசேட காலையுணவு நிகழ்வை நடாத்தியுள்ளது
October 25, 2023

இலங்கையில் வணிக சேவைகள் மற்றும் வணிகக் கடன் வசதிகளுக்கு முன்னின்று உதவுவதில் புகழ்பெற்ற DFCC வங்கி, தனது வணிக வாடிக்கையாளர்களுக்காக பிரத்தியேகமான காலையுணவு நிகழ்வொன்றை அண்மையில் ஏற்பாடு செய்திருந்தது. இலங்கையிலுள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனத்துடன் இணைந்து இந்நிகழ்வு ஏற்பாடு செய்யப்பட்டதுடன், சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் உலகளாவிய தலைமை அதிகாரியான மரியா பெர்னாண்டா கார்சா அவர்கள் இந்நிகழ்வில் பிரதான உரையை ஆற்றினார்.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் முதலாவது பெண் தலைமை அதிகாரியான கார்சா அவர்கள் அமெரிக்கா, மெக்சிகோ, கனடா பிராந்தியம், இலத்தீன் அமெரிக்கா மற்றும் ஆசியாவிற்கு ஏற்றுமதிகளை மேற்கொள்கின்ற, மெக்சிகோவைத் தளமாகக் கொண்ட ஒரு வீட்டுத் தீர்வுகள் நிறுவனமான Orestia இன் பிரதம நிறைவேற்று அதிகாரியாகவும் தற்போது செயற்பட்டு வருகின்றார். தனது தாய்நாட்டிலும், உலகெங்கிலும் சிறிய மற்றும் நடுத்தர அளவிலான தொழில் நிறுவனங்களுக்கு நீண்டகாலமாக ஆலோசகராகச் சேவையாற்றி வந்துள்ள அவர், மெக்சிகோ தொழில்தருநர்கள் சங்கத்தில் 19 ஆண்டுகள் சேவையாற்றியுள்ளதுடன், நான்கு ஆண்டுகளாக அதன் உப தலைவராகவும் செயற்பட்டுள்ளார். DFCC வங்கி ஏற்பாடு செய்த விசேட காலையுணவு நிகழ்வில் ‘சர்வதேச வணிக அனுசரணையில் உலகளாவிய போக்குகள்’ (Global Trends in International Trade Facilitation) என்ற தலைப்பில் பிரதான உரையை ஆற்றிய அவர், சர்வதேச வணிகத்தில் சமீபத்தைய தொழில்நுட்ப முன்னேற்றங்கள் மற்றும் மேம்பாடுகள் குறித்த விரிவான தேசிய கண்ணோட்டத்தை முன்வைத்தார்.
DFCC வங்கியின் பிரதம நிறைவேற்று அதிகாரியான திமால் பெரேரா அவர்கள் இந்நிகழ்வைப் பாராட்டி கருத்து வெளியிடுகையில், “கார்சா அவர்களையும், அவருடன் சேர்த்து இலங்கையிலும், சர்வதேசத்திலும் உள்ள சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் மதிப்பிற்குரிய பிரதிநிதிகளையும் வரவேற்கின்றமை எமக்கு மிகுந்த கௌரவமளிக்கின்றது. இவை அனைத்திற்கும் மேலாக, பெருமதிப்பிற்குரிய எமது வணிக வாடிக்கையாளர்களை வரவேற்பதற்கு வாய்ப்புக்கிடைத்தமை ஒரு பெரும் பாக்கியம். பொருளாதார மீள்எழுச்சிக்கான பயணத்தில் இலங்கை காலடியெடுத்து வைக்கின்ற இச்சமயத்தில் எமது வணிக வாடிக்கையாளர்களுக்கு ஓயாத ஆதரவை வழங்குவதே எமது பிரதான நோக்கம். பொருளாதாரக் குறிகாட்டிகளின் நேர்மறையான போக்கு அதிகரித்துச் செல்கின்ற நிலையில், பொருளாதார வளர்ச்சிக்கு வித்திடுவதற்காக, நிலைபேண்தகு வழியில் மீள்எழுச்சியை முன்னெடுப்பதற்கு சர்வதேச வணிகம் முக்கிய பங்கு வகிக்கின்றதென நாம் உறுதியாக நம்புகின்றோம். இலங்கையின் பொருளாதார மறுமலர்ச்சிக்கு பங்களிப்பாற்றுவதற்கு எமது வணிக வாடிக்கையாளர்களுடன் இணைந்த எமது கூட்டு முயற்சிகளில் ஒரு சாதனை இலக்காக இந்நிகழ்வு மாறியுள்ளது,” என்று குறிப்பிட்டார்.
மிகவும் ஆவலுடன் எதிர்பார்க்கப்பட்ட இந்நிகழ்வானது 2023 ஒக்டோபர் 20 ஆம் திகதியன்று கொழும்பிலுள்ள மூவன்பிக் (Movenpick) ஹோட்டலில் இடம்பெற்றதுடன், மதிப்பிற்குரிய விருந்தினர்கள் மற்றும் வங்கியின் சிரேஷ்ட முகாமைத்துவ அணியின் முக்கிய அதிகாரிகளுக்குப் புறம்பாக, 75 க்கும் மேற்பட்ட DFCC வங்கியின் மிகவும் முக்கியமான வணிக வாடிக்கையாளர்கள் கலந்து கொண்டனர். அறுசுவை மிக்க காலையுணவுடன், DFCC வங்கியின் முக்கியமான இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வாடிக்கையாளர்கள் பரஸ்பரம் நன்மைபயக்கும் கலந்துரையாடல்களை தமக்கிடையில் முன்னெடுக்கும் வாய்ப்பையும் இந்நிகழ்வு அவர்களுக்கு வழங்கியுள்ளது.
சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் உலகளாவிய தலைமை அதிகாரியான மரியா பெர்னாண்டா கார்சா அவர்கள் இது தொடர்பான ஆழமான அறிவைப் பகிர்ந்து கொள்கையில், “இலங்கை போன்ற ஒரு நாட்டைப் பொறுத்தவரையில் சர்வதேச வணிகத்தினூடாக கணிசமான மதிப்பை வெளிக்கொண்டுவருவதற்கான சாத்தியம் எல்லையற்றது என்பதுடன், குறிப்பாக வளர்ச்சி கண்டு வருகின்ற வணிக அனுசரணைப் பரப்பில் இது மிகவும் முக்கியமானது. தனது மரபுரீதியான பலங்களின் அனுகூலத்துடன், இப்பெறுமதியை உலகிற்கு எடுத்துச் சென்று, பரந்துபட்ட பிராந்தியங்களில் இயங்குகின்ற தொழில் நிறுவனங்களுக்கு முக்கியமான சந்தை வாய்ப்புக்களை வழங்குவதற்கு இது இலங்கைக்கு இடமளிக்கின்றது. வெளிப்புற வணிகத்தை வலுவாக வளர்ப்பதில் DFCC வங்கி போன்ற முற்போக்குச் சிந்தனை கொண்ட நிறுவனங்கள் ஈடுபடுவதைக் காண்பது மிகுந்த மனநிறைவளிக்கின்றது,” என்று குறிப்பிட்டார்.
இக்காலையுணவு நிகழ்வின் கருப்பொருளையொட்டியதாக, சர்வதேச வணிகத்திற்கு அனுசரணையளிக்க வேண்டியதன் முக்கியத்துவம், அவற்றின் கட்டமைப்புக்கள் மற்றும் சர்வதேசரீதியாக அது கண்டுள்ள வளர்ச்சி ஆகியன தொடர்பான விரிவான கலந்துரையாடல் இடம்பெற்றது. வர்த்தக அனுசரணை செயற்பாடுகளில் குறிப்பிடத்தக்க மேம்பாடுகளை இலங்கை எட்டியுள்ள நிலையில், அதனை மேம்படுவதற்கு இன்னும் வாய்ப்புக்கள் உள்ளன என்பது ஏற்றுக்கொள்ளப்பட்டது. வணிக ஒப்பந்தங்கள் மற்றும் ஏனைய பொருத்தமான பொறிமுறைகளை ஏற்படுத்துவதன் மூலமாக, மேம்பட்ட சர்வதேச வணிக உறவுகளை வளர்ப்பதற்கு, இராஜதந்திரரீதியான தலையீடுகள் அவசியம் என்பதையும் இக்கலந்துரையாடல்கள் அடிக்கோடிட்டுக் காட்டின.
இலங்கை, சர்வதேச வர்த்தக சம்மேளனத்தின் தலைவரான ஷனில் பெர்னாண்டோ அவர்கள் கருத்து வெளியிடுகையில், “வணிகங்கள், அரசாங்க ஸ்தாபனங்கள் மற்றும் சர்வதேச ஸ்தாபனங்கள் மத்தியில் அதிகரித்த ஒத்துழைப்பை வளர்த்து, இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி நிறுவனங்களின் உச்சபட்ச செயல்திறனுக்கு அனுசரணையளிப்பதே எமது முதன்மை நோக்கம். இந்நிகழ்வை வெற்றிகரமாக ஏற்பாடு செய்வதில் DFCC வங்கியுடன் ஒத்துழைத்துச் செயல்பட்டுள்ளமை எமக்கு மகிழ்ச்சியளிப்பதுடன், இதன் மூலமான வாய்ப்புக்களையும் மிகுந்த ஆவலுடன் எதிர்பார்த்துள்ளோம்,” என்று குறிப்பிட்டார்.
ஏற்றுமதித் துறை மீது மிகுந்த கவனம் செலுத்தி, ஏழு தசாப்தங்களுக்கும் மேலாக இலங்கையில் சர்வதேச வணிகத்தை மேம்படுத்துவதில் DFCC வங்கி மிகவும் முக்கிய பங்காற்றியுள்ளது. பல்வேறுபட்ட வணிக கடன் சேவைகளை வழங்கி, பொருளாதார வளர்ச்சி மற்றும் ஸ்திரத்தன்மையை ஊக்குவிப்பதில் DFCC வங்கியின் வகிபாகம் அளப்பரியது. ஏற்றுமதி சார்ந்த வணிகங்கள் சர்வதேச சந்தையில் செழிப்பதற்கு தம்மை போதுமான அளவில் தயார்படுத்திக் கொள்ள ஏதுவாக, போட்டித்திறன் கொண்ட வட்டி வீதங்கள் மற்றும் நெகிழ்திறன் கொண்ட மீள்கொடுப்பனவு விதிமுறைகளுடன் DFCC வங்கி ஆற்றி வரும் அர்ப்பணிப்புடனான சேவை இதற்கு முன்னுதாரணம். கடன் உத்தரவாத கடிதம், ஏற்றுமதிப் பத்திரங்கள் ஆகியன அடங்கலாக DFCC வங்கியின் வணிகக் கடன் தீர்வுகள், ஏற்றுமதியாளர்களுக்கும், இறக்குமதியாளர்களுக்கும் ஆபத்துக்களை திறன்மிக்க வழியில் நிர்வகித்து, பரிவர்த்தனைகளை சீரமைக்க வழிகோலுகின்றன. மேலும் வெளிநாட்டு நாணய மாற்றில் வங்கி கொண்டுள்ள நிபுணத்துவம், உலகளாவிய சந்தை இயக்கவியல் தொடர்பான ஆழமான புரிதல் ஆகியன மிகவும் அறிவுபூர்வமான தீர்மானங்களை மேற்கொள்வதற்கு அதன் வாடிக்கையாளர்களுக்கு வலுவூட்டுகின்றன. இலங்கையின் இறக்குமதி மற்றும் ஏற்றுமதி வணிகங்களுக்கு உதவுவதில் DFCC வங்கியின் ஓயாத அர்ப்பணிப்பு, சர்வதேச வணிகத்திற்கு அனுசரணையளித்து, பரந்த பொருளாதார சுபீட்சத்திற்கு அனுசரணையளிப்பதில் நம்பிக்கையும், விசுவாசமும் மிக்க கூட்டாளராக அதனை நிலைநிறுத்தியுள்ளது.
DFCC வங்கி பற்றிய விபரங்கள்
DFCC வங்கியானது 68 ஆண்டுகால வளமான வரலாற்றைக் கொண்ட முழுமையான சேவைகளை வழங்கும் ஒரு வணிக வங்கி என்பதுடன், பல்வேறு வணிக மற்றும் அபிவிருத்தி வங்கிச் சேவைகளை வழங்கி வருகிறது. அதன் நிலைபேற்றியல் மூலோபாயம் 2020-2030 இன் ஒரு பகுதியாக, வங்கியானது நெகிழ்திறன் கொண்ட வணிகங்களை தோற்றுவித்தல் மற்றும் பசுமை நிதிவசதி மற்றும் நிலைபேண்தகு, சமூகப் பொறுப்புணர்வுள்ள தொழில்முயற்சியாண்மை ஆகியவற்றை ஆதரிப்பதன் மூலம் மகத்தான நெகிழ்திறனுக்கு பங்களிப்பதில் ஒரு முன்னணி நிறுவனமாக மாறுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது, ஐக்கிய இராச்சியத்தின் Global Brands சஞ்சிகையால் 2021 இல் இலங்கையில் ‘Most Trusted Retail Banking Brand’ மற்றும் ‘Best Customer Service Banking Brand’ மற்றும் Euromoney இன் ‘Market leader in Cash Management 2021’ உட்பட பல பாராட்டுக்களையும், அங்கீகாரங்களையும் பெற்றுள்ளது. மேலும், DFCC வங்கியானது Business Today சஞ்சிகையால் இலங்கையின் சிறந்த 40 வர்த்தக நிறுவனங்களின் தரவரிசையிலும் பெயரிடப்பட்டுள்ளதுடன், Fitch Ratings Lanka Limited ஆல் A- (lka) தரப்படுத்தப்பட்டு, இலங்கை மத்திய வங்கியால் கட்டுப்படுத்தப்படுகிறது. நிலைபேற்றியலுக்கான அதன் அர்ப்பணிப்பிற்கு சான்றளிக்கும் வகையில், இலங்கையில் பசுமை காலநிலை நிதியத்தின் (Green Climate Fund – GCF) அங்கீகாரத்தைப் பெற்ற முதன்முதலான மற்றும் தற்போது வரையான ஒரேயொரு நிறுவனம் DFCC வங்கி என்பது குறிப்பிடத்தக்கது. இது நாடு முழுவதும் காலநிலைத் தணிவிப்பு மற்றும் அது சார்ந்த மாற்றத்தை உள்வாங்கும் செயல்திட்டங்களுக்கு ஆதரவாக 250 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான சலுகை நிதியைப் பெறுவதற்கான வாய்ப்பினை வழங்குகிறது.